பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி சவால் விடுத்துள்ளார்
News
oi-Hemavandhana
சென்னை: தமிழக பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடுமா? பின்வாங்குமா? என்ற குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் நேரடியாக ஒரு சவாலை, அண்ணாமலைக்கு விடுத்துள்ளது..!!
இடைத்தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி தயாராகி வருகிறது.. அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. மற்றொரு பக்கம், வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரு தரப்பிலும் வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிகிறது.. பாஜக போட்டியிட்டால் ஆதரவு தர தயார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.
அவமானமா இருக்கு, இன்னுமா கண்டுபிடிக்க முடியல? குடிநீர் தொட்டியில் மலம்கலந்த விவகாரம்.. சீறிய வசீகரன்

நோ சான்ஸ்
அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், எந்த முடிவையும் பாஜக அறிவிக்காமல் உள்ளது.. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர்த்து போட்டியிடும் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி நிறுத்தப்படும் வேட்பாளர் மக்கள் செல்வாக்கு பெற்றவராக, மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி.

போட்டி பொறாமை
இடைத்தேர்தல் கட்சிக்கு பலப்பரீட்சை கிடையாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை என்பது கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 13 மாதங்களில் வரப்போகிறது. நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும். வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரே மனவருத்தத்தில் உள்ளார்” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.. அதாவது, “அதிமுக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்து உள்ளதன் மூலம், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார் என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இடியாப்ப முடிச்சு
அதே நேரத்தில், இந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு, திமுக கூட்டணியுடன் மோதி தோற்றுவிட்டால், அது தங்கள் மீதான மதிப்பு குறைவதுடன், இந்த தோல்வி எம்பி தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதை பாஜக கணக்கு போடுவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்தினால், தேவையில்லாமல் அதிமுக கூட்டணிக்குள் சிக்கல் வந்துவிடக்கூடும் என்பதையும் யோசிப்பதாக சொல்கிறார்கள்.. அதனால்தான், பாஜக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததாலும் பாஜக மேலிடமும், அண்ணாமலையும் களத்தில் இறங்க தயங்குவதாகவும், அதன் வெளிப்பாடாகவே அண்ணாமலையின் இந்த பேட்டி அமைந்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்.

செக் சேலஞ்ச்
இப்படிப்பட்ட சூழலில்தான், அண்ணாமலைக்கு சேலஞ்ச் செய்துள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி… திருவண்ணாமலையில் ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’, ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தைரியமிருக்கா
அப்போது அவர் பேசும்போது, “இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் மிகுந்த தைரியத்தோடு அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன்… அவர் அதிமுகவை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று அன்றே சொன்னார். அவர் எம்பி தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன்பு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா? தனியாக கூட நிற்க வேண்டாம், அதிமுக கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும்.. யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்… எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி.

பந்து எங்கே
அதிமுக கூட்டணியில் இந்த தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர்… அவர்களின் கூட்டணியில் தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் கிடையாது.. இவ்வளவு தான் அவர்களின் பலம்… நாம் தேர்தல் களத்தில் நமது வேட்பாளரை இறக்கி விட்டு உள்ளோம்… ஆனால் அவர்கள் யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்கு உள்ளேயே உதைத்து கொள்கின்றனர்.. எங்களோடு பந்தை உதைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை… இதுவரை அவர்கள் அந்த களத்திற்கு வரவில்லை” என்றார் அழகிரி. தனியாக கூட நிற்க வேண்டாம், அதிமுக கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா? என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளதுடன், ஆப்ஷனையும் சேர்த்து தந்துள்ள நிலையில், பாஜக தரப்பு இதை உற்று கவனித்து வருகிறது..
English summary
Can BJP contest against dmk and is Annamalai ready to contest erode east by polls, asks Congress KS alagiri