விழுப்புரம்: வானூர் அருகே புதுகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பினர், விழுப்புரம் ஆட்சியர் மோகனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பது: புதுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்று வட்டாரமான தலைகாணிகுப்பம், தேவனந்தல், வங்காரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்து படிக்கின்றனர். மாலையில் 11, 12-ம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, 5.30 மணிக்கு விடப்படுகிறது. அந்த நேரத்தில் பேருந்து வசதியில்லாததால் 10 கி.மீ தூரம் நடந்தே வீட்டிற்குச் செல்கின்றனர்.
இவ்வாறு மாணவ, மாணவிகள் நடந்தே செல்லும்போது பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். கல்வி மற்றும் பாதுகாப்பு நலன் கருதி, மாலையில் இந்தப் பள்ளியின் வழியே செல்லும் திண்டிவனம் – உப்பு வேலூர் வழித்தடம் 7 பேருந்தை, மாலை 5.25 என்பதில் இருந்து, 5.50 ஆக உயர்த்த வேண்டும்.
மேலும் உப்புவேலூர் வரை செல்லும் இப்பேருந்தை தலைகாணிகுப்பம் வரை நீட்டிக்க வேண்டும். இன்னும் சிலநாட்களில் மாணவர்கள் செய்முறைத் தேர்வை எழுத உள்ளனர். பொதுத்தேர்வும் உடனே நடைபெற உள்ளது. அதிக மதிப்பெண் பெற்று அடுத்த நிலை கல்வியைத் தொடர ஏதுவாக, இப்பேருந்து நேர மாற்றம் மிகவும் பயனுதள்ளதாக இருக்கும். எனவே, விரைவாக இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.